திருவிழாவில் தொலைந்து போனவர்கள் அமைத்ததே அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம்

திருவிழாவில் தொலைந்து போனவர்கள் அமைத்ததே அ.தி.மு.க. கூட்டணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-04-02 23:00 GMT

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகில் நாகை நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த எழை மாணவர்களுக்கு இன்று மருத்துவ படிப்பு கனவாய் போனதற்கு மோடி கொண்டு வந்த நீட் தேர்வு தான் காரணம். மத்தியில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சியல்ல, மோடி என்ற தனிநபரின் ஆட்சி.

மோடி கப்பல் வெறும் கப்பல், கவிழப்போகும் கப்பல். அதனால்தான் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் மோடியுடன் கூட்டணி வைத்து கொள்ளவில்லை.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 150 பக்கங்கள் குற்றசாட்டு கூறிய ராமதாஸ், இன்று வரலாற்றிலேயே இது போன்ற முதல்–அமைச்சரை பார்த்ததில்லை என்று கூறுகிறார். அவரது அருகிலேயே அமர்ந்துள்ள அன்புமணியும் இதற்கு ஆமாம் போடுவது வேடிக்கையாக உள்ளது.

இவர்கள் எல்லாம் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி திருவிழாவில் தொலைந்து போனவர்கள் அமைத்த திக்கற்ற கூட்டணி. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெருகின்ற எக்ஸ்பிரஸ் கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்