மும்பையில் விறுவிறுப்பு அடைகிறது, நாடாளுமன்ற தேர்தல் களம் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் மும்பை உள்பட 17 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

Update: 2019-04-01 22:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் வருகிற 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடக்கும் 17 தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

இந்த தொகுதிகளில் மொத்தம் 295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.

4-ம் கட்டமாக வருகிற 29-ந் தேதி வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், நந்தூர்பர், துலே, தின்டோரி, நாசிக், சிரூர், ஷீரடி ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட மேற்கண்ட 17 தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்பு மனு செய்ய வருகிற 9-ந் தேதி கடைசி நாள்.

மும்பையில் வேட்பாளர்கள் பாந்திரா கலெக்டர் அலுவலகம் மற்றும் முல்லுண்டு மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மராட்டிய புத்தாண்டு தினமான வருகிற 6-ந் தேதியும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்யக்கூடாது. மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் இருந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலக வாயிலில் இருந்து 100 அடி தொலைவுக்கு வெளியில் தான் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வேட்பு மனு தாக்கல் தொடங்குவதையொட்டி பாந்திரா கலெக்டர் அலுவலகம் மற்றும் முல்லுண்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் மும்பையில் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைய தொடங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் பிரசாரம் அனல் பறக்க உள்ளது.

மேலும் செய்திகள்