சின்ன வீராம்பட்டினத்தில் கடல் மண்ணை திருடும் மணல் கொள்ளையர் தடுத்து நிறுத்தப்படுமா?
ஆற்று மணலை கடத்த அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால் சின்ன வீராம்பட்டினம், அரியாங்குப்பம் கடற்கரையில் கடல் மண் திருட்டில் மணல் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி மாநிலத்தில் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி அரியாங்குப்பம் அரிக்கன்மேடு, பாகூர், சோரியாங்குப்பம், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் சங்கராபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மாட்டுவண்டி, டிராக்டர், லாரி மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதை தடுக்க போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் திருட்டில் பிடிபடும் மாட்டுவண்டிகள் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
சங்கராபரணி ஆற்றில் மணல் திருடுவதற்கு போலீசார் மற்றும் அதிகாரிகளின் கெடுபிடி அதிகம் இருப்பதால் இப்போது கடல் மண்ணை திருட ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக சின்ன வீராம்பட்டினம் கடற்கரையோரத்தில் உள்ள சுடுகாடு அருகிலும், வீராம்பட்டினம் கடற்கரையோரத்திலும் கடல் மணலை கொள்ளையடித்த இடங்கள் பெரிய பெரிய பள்ளங்களாக காணப்படுகின்றன.
இதனால் மணல் சரிவு ஏற்பட்டு கடற்கரையோரத்தில் உள்ள தென்னை, பனை மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. கடல் மணலை திருடுவது குறித்து அந்த பகுதி மீனவர்கள் அரியாங்குப்பம் போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் மணல் திருட்டு நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிவந்தது குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த மாட்டுவண்டிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது கடல் மண் இருந்ததால் மாட்டுவண்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்ததாக கூறப்படுகிறது. கடல் மணல் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.