வர்த்தக துறைமுகம் அமைய இயற்கை வளங்கள் அழிக்கப்படாது பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

வர்த்தக துறைமுகம் அமைய இயற்கை வளங்கள் அழிக்கப்படாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-04-01 23:00 GMT
நாகர்கோவில்,

தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். அதாவது பனங்காலுமுக்கில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் தேங்காப்பட்டணம், அம்சி, முக்காடு, வைங்குளம், கூட்டாலுமூடு, சக்திநகர், புதுக்கடை, முஞ்சிறை, இரயுமன்துறை, பூத்துறை, கொல்லங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

முன்னதாக பனங்காலுமுக்கில் பிரசாரத்தை தொடங்கிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா சார்பிலும், கூட்டணி கட்சிகள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் வரவேற்றார்கள். பின்னர் அவர் பேசியதாவது:-

குமரி மாவட்டத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். 4 வழிசாலை, இரட்டை ரெயில்பாதை மற்றும் வர்த்தக துறைமுகம் ஆகியவற்றுக்கான பணிகள் நடக்கின்றன. வர்த்தக துறைமுகம் அமைய இயற்கை வளங்கள் அழிக்கப்படாது. கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.

ஏற்கனவே சாய்சப் சென்டர் திட்டத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால் அப்போது நான் வெற்றி வாய்ப்பை இழந்ததால் அந்த திட்டம் இல்லாமல் ஆக்கப்பட்டது. எனவே அதே போன்ற நிலை வராமல் இருக்க தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள்.

இந்தியாவில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு குமரி மாவட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளேன். குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி, மத மற்றும் அரசியல் ரீதியாக எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியாக இருக்க கூடிய சூழலை ஏற்படுத்தி தந்துள்ளேன். குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் வளமான எதிர்காலத்தை பெற வேண்டும். குமரி மாவட்ட இளைஞர்கள் வேலை தேடும் நிலையை மாற்றி முதலாளிகளாக வர நான் முயற்சிப்பேன். நம்பி வாக்குகளை தாருங்கள். மாற்றத்தை நான் தருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜாண் ஜோசப் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்