“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத்தந்த தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள்” வேட்பாளர் ஞானதிரவியம் பிரசாரம்

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத்தந்த தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள்” என்று மானூர் பகுதிகளில் பிரசாரம் செய்த நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் கூறினார்.

Update: 2019-04-01 22:00 GMT
மானூர்,

நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று மானூர், எட்டான்குளம், களக்குடி, தெற்குப்பட்டி, குறிச்சிகுளம், உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகிய பாண்டியபுரம், கட்டாரங்குளம், செழியநல்லூர், கானார்பட்டி ஆகிய 11 பஞ்சாயத்து பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். வாக்குசேகரிப்பின்போது வேட்பாளர் ஞானதிரவியம் பேசுகையில், “கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாதவர்களுக்கு ஆதரவு தராதீர்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்த தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்றார்.

வாக்குசேகரிப்பின்போது ம.தி.மு.க. மாநில செய்தி தொடர்பு செயலாளர் மின்னல் முகம்மது அலி, மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கொம்பையா, காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் பாக்கியகுமார், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் யூனியன் துணை தலைவர் கருப்பசாமி உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்