பதற்றமான 511 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேர்தல் அலுவலர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பதற்றமான 511 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஷில்பா கூறினார்.

Update: 2019-04-01 22:15 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஷில்பா தலைமை தாங்கினார்.

நெல்லை நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் பகத்சிங் குலேஷ், தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹர்சவர்த்தன், போலீஸ் பார்வையாளர் ராமேஸ்வரசிங், நெல்லை நாடாளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர்கள் ராஜாகோஷ், மணி, தென்காசி நாடாளுமன்ற செலவின பார்வையாளர் கபில்மண்டல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில், நெல்லை மாநகரில் 10 போலீஸ் நிலையங்களும், புறநகர் பகுதிகளில் 70 போலீஸ் நிலையங்களும், மாவட்ட எல்கைப்பகுதியில் 5 போலீஸ் நிலையங்களும் என மொத்தம் 85 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அதன் அடிப்படையில், சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் 19, வாசுதேவநல்லூர் தொகுதியில் 25, கடையநல்லூர் தொகுதியில் 51, தென்காசி தொகுதியில் 36, ஆலங்குளம் தொகுதியில் 69, நெல்லை தொகுதியில் 74, அம்பை தொகுதியில் 58, பாளையங்கோட்டை தொகுதியில் 80, நாங்குநேரி தொகுதியில் 65, ராதாபுரம் தொகுதியில் 34 என்று மாவட்டத்தில் மொத்தம் 511 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக, இதுவரை ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் பணம் மட்டும் ரூ.1 கோடியே 81 லட்சம் ஆகும். இதில் உரிய ஆவணங்களை காட்டி ரூ.56 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்று உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், ஊடக கண்காணிப்பு மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்களின் பிரசார வாகனம் மற்றும் பொதுக்கூட்டம், நட்சத்திர பேச்சாளர்களுக்கான அனுமதி, தெருமுனை பிரசாரம் போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற அனைத்து அலுவலர்களுடன், பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ், மணீஷ்நாரணவரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சாம்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்