சீர்மரபினர் சான்றிதழ் தர மறுத்தால் தேர்தலை புறக்கணிக்க முடிவு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வலையர் சாதியினர் மனு

சீர்மரபினர் சான்றிதழ் தர மறுத்தால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக வலையர் சாதியினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-04-01 22:45 GMT

ஈரோடு,

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு வசதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

முத்தரையர் டி.என்.சி., டி.என்.டி. உரிமை மீட்பு இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க சிலர் வந்தனர். அப்போது அவர்கள் கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தியபடி வந்தனர். இதனால் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் போலீசார் கோரிக்கை அட்டைகளை பறிமுதல் செய்துவிட்டு அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் வலையர் உள்பட 68 சாதியினருக்கு கடந்த 1979–ம் ஆண்டு வரை குற்றப்பழங்குடிகள் டி.என்.டி. என்று சாதிசான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு சீர்மரபினர் வகுப்பினருக்கு டி.என்.சி. என்ற சாதி சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த வலையர்கள் நாங்கள் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் டி.என்.சி. என்று தருவதற்கு பதிலாக வலையர் எம்.பி.சி. என்றும், செட்டிநாடு வலையர் எம்.பி.சி. என்றும் முரண்பாடாக சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால் எங்களால் கல்வி உதவித்தொகை, அரசு வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் பெற முடிவதில்லை.

எனவே இந்த குளறுபடியை சரிசெய்ய அனைத்து தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோரை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி, வலையர் என்ற பிரிவில் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் டி.என்.சி. சான்று வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

மேலும், டி.என்.சி. சான்றிதழ் வேண்டுமென்று போராடியதால் தமிழக அரசால் கடந்த மாதம் 8–ந் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், சீர்மரபினர் தமிழக அரசின் சலுகைகளை பெற டி.என்.சி. சான்றிதழையும், மத்திய அரசின் சலுகைகளை பெற டி.என்.டி. சான்றிதழையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு சீர்மரபினருக்கான டி.என்.சி., டி.என்.டி. சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். மேலும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர் சொட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக மனு கொடுக்க வந்தனர். அவர்கள் புகார் பெட்டியில் கோரிக்கை மனுவுடன் சேர்த்து தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளையும் போட்டுவிட்டு பட்டா வழங்காததை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுடைய வரிப்பணத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம். எங்களது வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்து, குடும்ப உறுப்பினர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு இந்திராநகர் 2–வது வீதியை சேர்ந்த சாகுல் ஹபீத் உம்மா (வயது 35) தனது 7 மாத கைக்குழந்தையுடன் வந்து கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

எனக்கு கடந்த 2004–ம் ஆண்டு திருமணமானது. அதன்பின்னர் எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. எனக்கு 13 வயதில் மகன் உள்ளான். நானும், எனது மகனும் என் அண்ணன் வீட்டில் வசித்து வந்தோம். அதன்பிறகு கடந்த 2016–ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த முகமது நூருல்லா கானுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கும் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எனக்கு நடந்த 2–வது திருமணத்தின் போது வரதட்சணையாக 5 பவுன் நகையும், ரூ.3 லட்சமும் எங்களது வீட்டில் இருந்து கொடுத்தனர். அதன்பிறகு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து தற்போது 7 மாதமாகிறது.

இந்த நிலையில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். மேலும், பணத்தை கொண்டுவரும் வரை நான் முதல் மனைவியுடன் சென்று வாழ்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். எனவே எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்