கண்டமங்கலம் அருகே, வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு - தடுக்க முயன்ற சித்தப்பா மீது சரமாரி தாக்குதல்
கண்டமங்கலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 2 பேர் நகையை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் சித்தப்பா மீது அவர்கள் இருவரும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
விழுப்புரம்,
திருப்பூர் விஜயா நகரை சேர்ந்தவர் வினோத் மனைவி ஆனந்தபைரவி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரசவத்திற்காக கண்டமங்கலம் அருகே விநாயகபுரத்தில் உள்ள தனது சித்தப்பா ராதாகிருஷ்ணன் (40) என்பவர் வீட்டிற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆனந்தபைரவி வந்திருந்தார்.
இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ஆனந்தபைரவி சிறிது நாட்கள் தனது சித்தப்பா வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ராதாகிருஷ்ணனின் மகள் வர்ஷா (13) அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து வீட்டின் பின்பக்க கதவை திறந்து சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றாள்.
அந்த சமயத்தில் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், அந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தபைரவியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தனர். உடனே அவர் எழுந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டதும் ராதாகிருஷ்ணன் எழுந்து மின்விளக்கை போட்டார். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரையும் பிடிக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் ராதாகிருஷ்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரமாகும். தாக்குதலில் காயமடைந்த ராதாகிருஷ்ணன், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.