தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி, தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட வாழ முடியாது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளின் கரையில் இருந்தவாறே தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம். அந்த அளவுக்கு தண்ணீர் நிறைந்து காணப்படும். மேலும் அள்ள அள்ள தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும்.

Update: 2019-03-31 22:30 GMT
விழுப்புரம்,

எத்தனை வளமிருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு தற்போது குறுக்கே நிற்பது தண்ணீர் பிரச்சினை தான். பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. மேலும் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் பகுதியிலும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். தியாகதுருகம் ஒன்றியத்தின் மொத்த பரப்பளவு 32 ஆயிரத்து 607 ஹெக்டேர் ஆகும். இதில் 28 ஆயிரத்து 480 ஹெக்டேர் விளை நிலமாகும்.

இங்கு 300-க்கும் மேற்பட்ட குளங்களும், நூற்றுக்கும் அதிகமான ஏரிகளும் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக பருவநிலையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு மழையின் அளவு குறைந்து போனது. இதன் காரணமாகவும் கடும் வெயிலின் தாக்கத்தினாலும் இப்பகுதியில் உள்ள பல ஏரிகளும், குளங்களும் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதனால் ஏரிகள் அனைத்தும் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது.

கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் மணிமுக்தா ஆறு ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி வழியாக விருத்தாசலம் வரை செல்கிறது. இந்த ஆற்றில் அதிகளவு மணல் திருட்டு நடக்கிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

வெளியூர் செல்லும் விவசாயிகள்

இதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை விவசாயத்திற்காக 10 ஆயிரத்து 750 ஹெக்டேர் விளை நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் மிகக்குறைவாகும். அந்த பயிர்களும் தற்போது தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தீவன பற்றாக்குறையாலும், தண்ணீர் தட்டுப்பாட்டாலும் ஆடு, மாடுகளை வளர்க்க முடியாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் கால்நடைகளை விற்க தொடங்கி விட்டனர். மேலும் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு கூலி வேலைக்காக செல்கின்றனர்.

விலை கொடுத்து வாங்கும் குடிநீர்

இதுகுறித்து தியாகதுருகம் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், கோமுகி மற்றும் மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும் தியாகதுருகம் பகுதியில் 80 சதவீத விளை நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.

மேலும் ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், வருங்கால சந்ததியினருக்கு அவற்றை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா? என்பது அரிதான ஒன்றாகவே உள்ளது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்க அரசு வகுத்த சட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் தியாகதுருகம் ஒன்றிய பகுதியில் கோமுகி, மணிமுக்தா ஆற்றோரம் கடைமடை வாய்க்கால் அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சியில் அம்மாப்பேட்டை, கச்சிராயப்பாளையம், அக்கராயப்பாளையம் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கோமுகி ஆற்றின் கரையோரத்தில் 2 கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சியாலும், வெயிலின் தாக்கத்தாலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. கோமுகி ஆறும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டதால், ஏராளமான கிராம மக்கள் குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர்.

மேலும் குடிநீருக்காக கோமுகி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த 2 கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக பொது குழாய் அருகிலேயே நீண்ட நேரமாக காத்துக்கிடந்தும் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை பொய்த்து போவதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் அரசும், அரசு சார்ந்த துறையினரும் நீர் மேலாண்மையை சரிவர கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வறட்சியை போக்க முடியும்.

மேலும் செய்திகள்