ஊழல் புதை மண்ணில் சிக்கி அ.தி.மு.க. அரசு தவிக்கிறது - கடலூரில் வைகோ பேச்சு
ஊழல் புதை மண்ணில் சிக்கி அ.தி.மு.க. அரசு தவிக்கிறது என கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கடலூர்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி. எஸ்.ஸ்ரீரமேசை ஆதரித்து தேர்தல் பிரசாரம் கடலூர் உழவர் சந்தையில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, ம.தி.மு.க. நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்தவேனில் நின்று தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி. எஸ்.ஸ்ரீரமேசை ஆதரித்து பேசியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகமா! பாசிசமா! என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல். மதச்சார்பின்மையை பாதுகாக்கும் அரசு வேண்டுமா?, ஒற்றைத்தத்துவத்தை திணித்து நாட்டை ரத்தகளறியாக்கும் அரசு வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்றார். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. அதேபோல் அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.10 ஆயிரத்து 361 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு கம்பெனிகள் வந்தபோது கமிஷன் கேட்டதால் அவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர். ஆக வேலையில்லா திண்டாட்டத்துக்கு இந்த அரசு ஒரு காரணம்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாழாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் குடிநீர் இல்லாமல் போகும், வீராணம் ஏரி வறண்டுபோய்விடும்.
பருப்பு கொள்முதல், கல்வி, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், ஆம்னி பஸ் வாங்கியது ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் புதை மண்ணில் அ.தி.மு.க. அரசு சிக்கி தவிக்கிறது. அதுமட்டுமின்றி அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் துரோக திட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் சாத்தியமா? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தினால் இந்த திட்டம் சாத்தியமே என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜ் கூறி இருக்கிறார். எனவே இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேசுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, வடலூர் ஆகிய இடங்களில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.வி. எஸ்.ஸ்ரீரமேசை ஆதரித்தும், புவனகிரி, சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்தும் வைகோ பிரசாரம் செய்தார்.