தீவன தட்டுப்பாடு எதிரொலி, வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள்
கம்பம் பகுதியில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், நெல் அறுவடை முடிந்த வயல்களில் மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.
கம்பம்,
கம்பம் நந்தகோபாலன் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளை ஆங்காங்கே மாட்டுத்தொழுவம் அமைத்து வளர்த்து வருகின்றனர். தினமும் இந்த மாடுகளை கம்பம் அருகே உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள் கருகி வருகின்றன. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு வருவதால் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
தற்போது கம்பம் பள்ளத்தாக்குப்பகுதியில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், சுருளிப்பட்டிசாலை, சின்னவாய்க்கால், சுருளிபட்டிசாலை, ஏழரசு களம், அண்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் போக நெல் அறுவடை முடிந்துள்ளன. இந்த வயல்களில் சிதறி கிடக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
இதனால் அந்த பகுதிகளில் உள்ள வயல்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விட்டு வருகின்றனர். இந்த வயல்களில் மாடுகளின் சாணம் மக்கி உரமாக மாறுவதால், அடுத்த சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதனால் வயல்களில் மாடுகளை மேய்ப்பதற்கு விவசாயிகள் தடை விதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.