அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தண்ணீரில் மிதந்து மாணவர்கள் யோகாசனம்

அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-31 22:30 GMT
திருவள்ளூர்,

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 40 மாணவர்கள் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கேயே கலெக்டர் தலைமையில், ‘வரும் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்போம், எங்களது வாக்குகளை விற்க மாட்டோம்’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் யோகாசனம் செய்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்