எடப்பாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
எடப்பாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து தாதாபுரம், வேம்பனேரி, இருப்பாளி, செட்டிமாங்குறிச்சி, பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, சிலுவம்பாளையம், வெள்ளரிவெள்ளி, சித்தூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவருடன் பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசும்போது, முதல்-அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்கள் வரும். நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், என்றார்.
இதையடுத்து வெள்ளாண்டிவலசை பகுதியில் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவிற்கு வேட்பாளர் சரவணன் திடீரென சென்றார். பின்னர் அவர், மண்டபத்திற்குள் இருந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களிடமும், அங்கிருந்த உறவினர்களிடமும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முன்னதாக எடப்பாடி பஸ் நிலையம் அருகில் எடப்பாடி தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் ராமன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர் சரவணன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மாதேஸ், கரட்டூர் மணி, பா.ம.க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.