புளியந்தோப்பில் கொலை செய்ய திட்டம் தீட்டிய 2 பேர் கைது 4 கத்திகள் பறிமுதல்

புளியந்தோப்பில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-31 23:00 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு பி.கே. காலனியை சேர்ந்தவர் மதன் (வயது 32). இவர், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை மதன் அருகில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் வெட்டி, அவரிடம் இருந்த ரூ.3,850 மற்றும் செல்போனை பறித்தனர். மதனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கத்தியுடன் இருந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள், தங்களிடம் இருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து மதன் அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் மதனிடம் வழிப்பறி செய்தவர்களில் 2 பேர் புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது அதில் ஒருவர் மாடியில் இருந்து குதித்து கை முறிந்த நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார்.

அந்த வீட்டில் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள், ராயபேட்டையை சேர்ந்த அருண் (26) மற்றும் அரவிந்தன் (24) என்பதும், முன்விரோதம் காரணமாக ராயபேட்டையை சேர்ந்த அழகுராஜா என்பவரை கொலை செய்ய நண்பர்களுடன் சதி திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும் வழி செலவுக்காக மதனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜ், அஜித் மற்றும் அப்பு ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்