கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர், மாணவி பலி - பிறந்த நாள் கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

கார் மீது மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவர், மாணவி ஆகியோர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

Update: 2019-03-30 23:03 GMT
மேட்டுப்பாளையம்,

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர், மாணவி பலியான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை கவுண்டம்பாளையம் கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருடைய மகன் மணிராஜ் (வயது 21). இவர் கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன்பாலத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் வினோதினி (20). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. இலக்கியம் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

மணிராஜுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள். எனவே அவரது நண்பர்கள் ராம்பிரகாஷ் (20), வெங்கடேஷ் (20) ஆகியோர் காஞ்சீபுரத்தில் இருந்து கோவை வந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் உள்ள கேளிக்கை பூங்காவுக்கு செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி மணிராஜ், வினோதினி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், ராம்பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின் ரோடு பினிக்ஸ் பார்க் அருகே ரோட்டின் நடுவே இரும்புத்தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்புறம் கார் ஒன்று நின்றது. மணிராஜ் அந்த காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் இடித்து மோதியது. இதில் மணிராஜ், வினோதினி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

அந்த நேரத்தில் எதிரே வந்த லாரி சக்கரத்தில் மணிராஜ், வினோதினி ஆகியோர் சிக்கினர். இதில் அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் மணிராஜ் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோதினி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் விபத்தில் சிக்கி இறந்த மணிராஜின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

மேலும் செய்திகள்