ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் பழைய போலீஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். எனினும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்திய ரவுடி பிரகலாதன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கிருஷ்ணம்பாளையம் ரோடு, கக்கன்நகர், கமலாநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டுக்கு நேற்று பகல் 11 மணிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஈரோட்டில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களும், அதேபோல் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்த வாகனங்களும் செல்ல முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாங்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் எங்களது வீடுகளின் முன்பு வாந்தி எடுத்து வைப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஒரு சில குடிமகன்கள் மதுபோதையில் ஆடைகள் விலகியபடி ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் மாணவிகள் மற்றும் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடிவதில்லை.
மேலும் அவர்கள் மது போதையில் தகாத வார்தைகளால் திட்டியும் தீர்க்கிறார்கள். இதனால் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை இனி திறக்கக்கூடாது. உடனடியாக அதை அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் நாங்கள் போராட்டதை கைவிட மாட்டோம். என்றனர்.
அதற்கு போலீசார், ‘டாஸ்மாக் கடையை திறக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அவர்கள் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுங்கள்’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையின் ஓரமாக நின்றனர். அதன் பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்ததுடன் அந்த கடைக்கும் ‘சீல்’ வைத்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.