முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Update: 2019-03-30 22:15 GMT
நிலக்கோட்டை,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழிசேகரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் தேன்மொழி சேகர் ஏற்கனவே இந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரது பகல் கனவு பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் எம்.பி.உதயகுமார், நிலக்கோட்டை அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்