ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளி கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2019-03-30 21:30 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன். இவருடைய மகன் கண்ணன் (வயது 27). இவர் மீது கடந்த ஆண்டு அப்பகுதியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. இதுதொடர்பாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கண்ணன் தினமும் காலை, மாலையில் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் கண்ணன் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் தன்னுடைய நண்பர்களான மேல மங்களகுறிச்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் கார்த்திகேயன் (32), வெள்ளூரைச் சேர்ந்த தளவாய் மகன் ரமேஷ் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெள்ளூருக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது லோடு ஆட்டோவை மோட்டார் சைக்கிளின் மீது மோத விட்ட 8 பேர் கொண்ட கும்பல், கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. லோடு ஆட்டோ மோதியதில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். ரமேஷ் தப்பி ஓடி விட்டார்.

2 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், கடந்த 23-11-2018 அன்று மேல மங்களகுறிச்சியில் முன்விரோதம் காரணமாக பேட்மாநகரத்தைச் சேர்ந்த வினோத், கீழ கல்லாம்பாறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிக்குப்பழியாக வினோத்தின் தம்பி காளிதாஸ் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான காளிதாஸ் உள்ளிட்ட 8 பேரை பிடிப்பதற்காக, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரெனிஸ், ஜீவமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார், கொலையாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்