நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை: கார்களில் கொண்டு சென்ற ரூ.20½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் கார்களில் கொண்டு சென்ற ரூ.20½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் கார்களில் கொண்டு சென்ற ரூ.20½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவு, பகலாக அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல் லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறி முதல் செய்து வருகின்றனர்.
நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் பறக்கும் படை அதிகாரியான மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரம்மநாயகம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லையா, சங்கரநாயணன் உள்ளிட்டோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், கார் ஓட்டி வந்தவர் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன் என்பதும், காரில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. அந்த பணம் பாவூர்சத்திரத்தில் உள்ள பீடி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு நெல்லை தாசில்தார் சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை கருவூலத்தில் சேர்த்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படை அதிகாரி அறிவுறுத்தினார்.
ரூ.10.61 லட்சம் பறிமுதல்
நெல்லையை அடுத்த மேலச்செவலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரியான தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சத்து 61 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவர் மேலப்பாளையம் ராவுத்தர் கீழத்தெருவை சேர்ந்த செரீப் அலி (வயது 57) என்பதும், மேலப்பாளையத்தில் உள்ள பீடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.
பீடி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் கொண்டுசெல்வதாக தெரிவித்தார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அம்பை தாசில்தார் வெங்கடேசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக நெல்லை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.