நாமக்கல்லில் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பொதுப்பார்வையாளர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-30 23:00 GMT
நாமக்கல், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும், ‘சி-விஜில்’ என்ற ஸ்மார்ட் போன் செயலி மூலம் வரும் புகார்களை பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயற்கைகோள் தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கண்காணிக்க ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த குழுவினர் தினசரி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பாக வெளியாகும் விளம்பரங்கள், பிரசார செய்திகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் ஒரே நேரத்தில் 20 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகளை பார்வையிடும் வசதிகளும், 20 தொலைக்காட்சி ஒளிபரப்பு களையும், 24 மணிநேரமும் தொடர்ந்து பதிவு செய்யும் வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்மூலம் தேவைப்படும் வீடியோ செய்திகள் கணினிகளில் பதிவு செய்யப்படுகின்றன. கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது.

இதற்கிடையே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் தொலைக்காட்சிகளின் பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை தனி பதிவேடு மூலம் பராமரித்து வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசியா மரியம் தலைமையில், நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பதிவேடுகளில் உள்ள தகவல்களின்படி அதற்கான வீடியோ பதிவுகள் தொகுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டு உள்ளதையும் அவர் பார்வையிட்டார். மேலும், ஊடக மையம் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தினையும் தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸிலி ராஜ்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்