ஓட்டப்பிடாரம் அருகே இரவில் விபத்து: 2 பேர் பலி மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
ஓட்டப்பிடாரம் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மளிகை கடைக்காரர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜெகவீரபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் நேற்று இரவு எட்டயபுரம் சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த வரதராஜ் (78) என்பவரும் வந்தார்.
கார் மோதியது
மதுரை-தூத்துக்குடி பைபாஸ் சாலையில் இருந்து ஜெகவீரபாண்டியபுரத்துக்கு செல்லும் சாலைக்கு ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிச்சந்திரன், வரதராஜ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த ரால்ப் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.