திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அனைத்து கட்சி வேட்பாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் பொது பார்வையாளர், கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2019-03-30 22:45 GMT
திருவள்ளூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து கட்சி வேட்பாளர்களுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுரேந்திரகுமார், கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-
வேட்பாளர்கள் 3 முறையேனும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரை கட்டாயம் சந்தித்து தேர்தல் தொடர்பான செலவின தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட செலவினங்களை டாக்டர் பிரவீன்குமாரிடமும், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட செலவினங்களை முகேஷ்கட்டாரியாவிடமும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் செலவினம் தொடர்பான விவரங்களை பெற அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள கணக்கியல் குழுவிடம் கேட்டுபெறலாம். மாவட்டம் முழுவதும் பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தும் வாகனங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ளவேண்டும்.

சட்டமன்ற தொகுதி வரையறைக்குள் உபயோகிக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி பெற அந்தந்த தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அணுகலாம். மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது அவர்கள் எந்த இடத்திற்கு செல்கின்றனர், நேரம், இடம் போன்றவற்றை கண்டிப்பாக முன்கூட்டியே முடிவு செய்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ்நிலையத்தில் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒரே இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்யாமல் வேறு வேறு நாட்களில் போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று தங்கள் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து வேட்பாளர்களும் கடைபிடித்து கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளவேண்டும். உருவ பொம்மை எரிப்பது, உருவபொம்மையை ஊர்வலமாக கொண்டு செல்வது போன்ற தேவையில்லாத செயல்களிலும் தேவையில்லாமல் கூட்டம் கூடி பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து வேட்பாளர்களும் கடைபிடித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், தேர்தல் தாசில்தார் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்