பெரும்பாலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பெரும்பாலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-30 22:15 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள பெரிய கடமடை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை குடிநீர் வழங்கக்கோரி பெரிய கடமடை கிராமத்தில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பென்னாகரம், நெருப்பூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் மற்றும் பெரும்பாலை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடந்த 2 மாதமாக இந்த கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் வருவதே இல்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பெண்கள் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது.

இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 24 மணி நேரத்தில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்