அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிலைய மேலாளர் அலுவலகத்தை பயணிகள் முற்றுகை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென பயணிகள் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-30 22:45 GMT
அரக்கோணம், 

திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரெயில் தினமும் காலை 6.48 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து 6.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். நேற்று காலை அந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 7.20 மணிக்கு வந்தது.

ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் வாங்கி சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பயணியிடம் டிக்கெட் கேட்டபோது நான் அவசரத்தில் ரெயிலில் ஏறி விட்டேன். டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி உள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியின் சட்டையை பிடித்து இழுத்து நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

இதை பார்த்து கொண்டிருந்த மற்ற பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் எடுக்கவில்லை என்றால் இவ்வாறு அவமரியாதையாக அழைத்து செல்வீர்களா? என்று வாக்குவாதம் செய்து நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, கிரி, ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் டிக்கெட் பரிசோதகரும், டிக்கெட் எடுக்காமல் சென்ற பயணியும் சமாதானம் அடைந்தனர். அதன்பின்னர் முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்