தஞ்சை மாவட்டத்தில், ரூ.7 லட்சம் செல்போன்கள்-பட்டுப்புடவைகள், ரூ.95 ஆயிரம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

தஞ்சை மாவட்டத்தில் ரூ.7½ லட்சம் செல்போன்கள்-பட்டுப்புடவைகள், ரூ.95 ஆயிரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-29 23:00 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? விடுதிகள், திருமண மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. உரிய ஆவணங்களை காண்பித்தால் பணமும், பரிசு பொருட்களும் திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை கொண்டிராஜபாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே நேற்று அதிகாலை பறக்கும்படை அலுவலர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சில் இருந்த பார்சலில் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை சென்னை தி.நகரை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்த செல்போன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த செல்போன்களுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இதனையடுத்து அந்த செல்போன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 180 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

இந்த செல்போன்களை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் பார்வையிட்டு உரிய ஆவணங்களை கொடுத்து விட்டு செல்போன்களை பெற்று செல்லலாம் என முகமது இக்பாலிடம் தெரிவித்தார்.

இதேபோல் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி பஜாரில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயபிரதா தலைமையில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தனர். அதில் 50 பட்டுப்புடவைகள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜலு மகன் துரை என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி இந்த பட்டுப்புடவைகளை அவர் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 500 மதிப்பிலான 50 பட்டுப்புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பட்டுப்புடவைகளை திருவிடைமருதூர் தாசில்தார் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை நிலைய கண்காணிப்பு குழு அலுவலர் மகாலட்சுமி தலைமையில் குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.94 ஆயிரத்து 500 இருந்தது. இதனை தொடர்ந்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணம் காடுவெட்டி தெருவை சேர்ந்த கதிரேசன் மகன் லட்சுமணகுமார்(வயது 28) என்பது தெரிய வந்தது.

இந்த பணத்தை அவர், ஸ்ரீரங்கத்துக்கு பூக்கள் வாங்குவதற்காக கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்து ரூ.94 ஆயிரத்து 500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்