மக்கள் நலத்திட்டங்களை வழக்குகள் மூலம் தி.மு.க. தடுக்கிறது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை வழக்குகள் மூலம் தி.மு.க. தடுக்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2019-03-29 23:15 GMT
கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவை பாதுகாப்பாகவும், வல்லரசாகவும் மாற்றும் தகுதியும், திறமையும் உள்ள வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திரமோடி. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார். சுப்ரீம்கோர்ட்டு மத்திய அரசின் அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான ரகசியம் காக்கப்பட வேண்டும். வெளிப் படையாக கூறமுடியாது என்று சொன்ன பிறகும் அதைபற்றி ராகுல்காந்தி பேசுவது தவறு. மத்திய-மாநில அரசுகள் மீது தொடர்ந்து தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. ஆனால் 2ஜி வழக்கில் ஜாமீனில் உள்ள கனிமொழி, ராசா ஆகியோர் மீண்டும் சிறைக்கு போவது உறுதி.

சுதந்திர தினம், குடியரசு தினத்தை கூட சரியாக தெரியாமல் மாறி மாறி பேசும் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 அரசு அறிவித்தது. மேலும் தற்போது ஏழை, எளிய மக்களுக்கு மாநில அரசு ரூ.2 ஆயிரமும், மத்திய அரசு ரூ.6 ஆயிரமும் அறிவித்துள்ளது. ஆனால் வழக்குகள் போட்டு நலத்திட்ட உதவிகளை செய்யவிடாமல் தடுக்கும் வேலையை தி.மு.க. செய்து வருகிறது.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார். புகைபிடிப்பது, மதுவுக்கு எதிராக நல்ல நடவடிக்கைகளை எடுத்தார். இரட்டை இலையால் தாங்கி நிற்கும் பா.ம.க.வின் மாம்பழத்துக்கு அனைவரும் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்