கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்றளிப்பு-கண்காணிப்பு குழுவின் பணிகள் ஆய்வு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் பணிகள் குறித்து தேர்தல் பொதுபார்வையாளர் பிரசாந்த்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-03-29 22:15 GMT
கரூர், 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் பிரசாரம், வேட்பாளர்களின் செலவினம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் குழு, கணக்கீட்டுக்குழு என பல்வேறு குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் தொகுதியின் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாந்த்குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் ஆகியோர் அந்த குழுக்கள் செயல்படும் விதம் குறித்து நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் அறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உள்ளூர் மற்றும் கேபிள் சேனல்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறதா? வெளியாகும் விளம்பரம் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் ஏற்றப்பட்டுள்ளதா? என தேர்தல் பொதுபார்வையாளர் கேட்டறிந்தார்.கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இதர சேனல்களில் ஒளிபரப்பப்படும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஒளிபரப்பப்படுகின்றது என்பது கணக்கெடுக்கப்பட்டு, கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக்கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேடுகளையும் தேர்தல் பொதுபார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அரசியல்கட்சியினர் வாகன அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கும் அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின்போது, துணை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான சூர்யபிகராஷ், மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் எடுப்பு) சிவப்பிரியா,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்