எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? சித்தராமையா கேள்வி

எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-03-29 22:30 GMT
மைசூரு, 

எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மைசூரு நகர் பம்பு பஜார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்கள், பிரமுகர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பயப்பட மாட்டோம்

பிரதமர் மோடி, தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு இந்த வருமான வரி சோதனையை நடத்தி உள்ளார். வருமான வரித்துறையை அவர் தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார். தேர்தல் நேரத்தில் வருமான வரிசோதனை நடந்தால் தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள் பயப்படுவார்கள், மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்படும் என்பதற்காக திட்டமிட்டு இந்த சோதனையை பா.ஜனதாவினர் நடத்தி உள்ளனர்.

ஆனால் இந்த சோதனைக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பா.ஜனதாவினர் வருமான வரித்துறையை எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஆயுதமாக பயன்படுத்துவதை நாட்டு மக்கள் அறிவர். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

எடியூரப்பா வீட்டில்...

வருமான வரி சோதனை நடத்துவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனை நடப்பதை தான் எதிர்க்கிறேன். இந்த சோதனை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் தான் நடக்கிறது. பா.ஜனதாவினரின் வீடுகளில் எந்த சோதனையும் நடக்கவில்லை.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க எடியூரப்பா ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசினார். இதுதொடர்பான ஆடியோவும் வெளியானது. அந்த ஆடியோவில் பேசியது நான் தான் என்றும் எடியூரப்பா ஒப்புக்கொண்டார். அப்படி இருந்தும் எடியூரப்பா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தாதது ஏன்?.

28 தொகுதிகளிலும் பிரசாரம்

பணம் எண்ணும் எந்திரம் வைத்திருக்கும் ஈசுவரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?. எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்க மோடி முயற்சி செய்கிறார். ஆனால் இந்த சோதனையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எதிர்க்கட்சிகளை மிரட்டி, அவர்களை பணிய வைத்து மீண்டும் பிரதமர் ஆகிவிடலாம் என்று மோடி எண்ணுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், பாரபட்சமில்லாத தேர்தல் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்