நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழே குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
மண்டியா,
நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழே குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கே.ஆர்.எஸ். அணை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக கருதப்படும் கே.ஆர்.எஸ். அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இதனால் அந்த அணை தமிழக, கர்நாடக மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் தலைக்காவிரி உள்ளது.
கர்நாடகத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதியான தலைக்காவிரியில் போதிய மழை பெய்யாததாலும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது.
நீர்மட்டம் குறைந்தது
இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கீேழ தண்ணீர் குறைந்துள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 98.50 அடி தண்ணீர் உள்ளது. 45.05 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 17.26 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 58 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,861 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் கே.ஆர்.எஸ். அணையில் 80.39 அடி தண்ணீர் இருந்தது.
குடிநீர் தட்டுப்பாடு
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராமநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் இருந்து வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால், கோடைகாலத்தில் இந்த 4 மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என்று காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் முதல் கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டியது. இந்த தொடர் கனமழையால் கே.ஆர்.எஸ். அணை 3 முறை நிரம்பியது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.