சிட்லிங் பகுதியில் புதிய அணைகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
சிட்லிங் பகுதியில் புதிய அணைகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரூர் ஒன்றியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அரூர்,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதேபோன்று அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமார் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, வேடகட்டமடுவு, தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.
இந்த கூட்டங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ஆர்.பசுபதி வரவேற்றார். இந்த பிரசார கூட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதேபோன்று தமிழகத்தில் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். விவசாயிகள் மற்றும் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர மத்திய, மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்கள் தொடர அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். எங்கள் கூட்டணிக்கு நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவோம். அதன்மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த சிட்லிங் பகுதியில் மத்திய அரசின் மூலம் புதிய அணைகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.