தூத்துக்குடி வாகன சோதனையில் பரபரப்பு: 102 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 102 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 102 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை யூனியன் உதவி பொறியாளர் ஜேசுராஜ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மதியம் தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. ரோட்டில் ஒரு நகைக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
102 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள்
அப்போது அந்த வழியாக வந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் சுமார் 102 கிலோ தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வேன் கர்நாடகாவில் இருந்து சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு நகைகளை கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், அந்த நகைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயத்திடம் ஒப்படைத்தனர். அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகைகளை ஒப்படைத்தார். அந்த நகைகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டார். பின்னர் தேர்தல் செலவின உதவி பார்வையாளர் சிவநாராயணராஜன், சுங்கத்துறை அதிகாரி கார்த்திகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கிறிஸ்டி ஆகியோர் நகைகள் மற்றும் அதற்கான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எத்தனை கிலோ இருக்கிறது என்பது குறித்து பரிசோதனை செய்தனர்.
கலெக்டர் பேட்டி
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மதியம் 2.45 மணிக்கு தூத்துக்குடி தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில், 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் இருந்தபோதும், விதிமுறைப்படி பறக்கும் படை அதிகாரிகள் அந்த வேனை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கொண்டு வந்தனர்.
தற்போது அந்த நகைகளுக்கான ஆவணங்களை, தேர்தல் செலவின உதவி பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளும் நகைகள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஆய்வு முடிந்த பிறகுதான் தங்கம் நகைகள் எவ்வளவு? வெள்ளி நகைகள் எவ்வளவு? என்பது தெரியவரும். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 102 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.