லால்குடி அருகே கோவில் விழாவில் கஞ்சி குடித்த 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

லால்குடி அருகே கோவில் விழாவில் கஞ்சி குடித்த 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர் களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-03-29 23:00 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த திருமங்கலம் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், வேண்டுதல் நிறைவேற அப்பகுதி மக்கள் சார்பில் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக மதியம், இரவு ஆகிய 2 நேரங்களில் கொள்ளு கஞ்சி, இளநீர், நீர் மோர், பானகம் கொடுக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் கொள்ளு கஞ்சி, நீர்மோர், பானகம் கொடுக்கப்பட்டது. இதனை, 50-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று அதிகாலை கொள்ளு கஞ்சி குடித்தவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மயக்கம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில், மாதேஸ்வரன் (வயது 12), யோகபிரியா(9), மலர் (10), சதீஸ்(10), சுதீஸ்(9), அய்யப்பன் (35), சிவபிரியா (13), பிரியங்கா (14), ஆகிய 8 பேர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சித்ரா, புதூர் உத்தமனூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, தச்சன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஸ்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெயபிரகாஷ், லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதிகாரி சித்ரா கூறுகையில், கோவில் திருவிழாக்களில் அன்னதானம், கஞ்சி, குளிர்பானங்கள் வழங்கும் போது முறையாக வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் தெரியப்படுத்தி ஆய்வு செய்த பின்பு தான் அவற்றை வினியோகிக்க வேண்டும். கோவில் விழாக்களில் சுத்தம் செய்யப்படாத பாத்திரங்களில் உணவு பொருட்களை பயன்படுத்துவதாலும், காலாவதியான உணவு பொருட்களை பயன்படுத்துவதாலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

ஆகவே, உணவு பாதுகாப்பு துறை அலுவலரின் ஒப்புதல் பெற்று, அவர் ஆய்வு செய்த பின்னரே பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நல முடன் உள்ளதாகவும், கோவிலில் கொள்ளு கஞ்சி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித் தார்.

மேலும் செய்திகள்