கொள்ளிடம் அருகே, சிலை அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
கொள்ளிடம் அருகே சிலை அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் கிராமத்தில் சாலையோரத்தில் சொந்த பட்டா நிலத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக முன்னாள் தலைவர் பிரேம்குமார் வாண்டையார் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் கொள்ளிடம் அருகே புத்தூர் கடைவீதியில் 10 கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
இதில் மூ.மு.க. பொதுச் செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி தலைவர் ரவி வாண்டையார், மண்டல தலைவர் வைபவ வாண்டையார், மாவட்ட செயலாளர் முனிபாலன், ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திடீரென நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.