தஞ்சையில் பரிதாபம், தூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கழுத்தில் கயிறு இறுக்கி சாவு - மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயன்றவருக்கு நேர்ந்த துயரம்

தஞ்சை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்ற தொழிலாளியை தூணில் கட்டி வைத்து இருந்தனர். அப்போது கழுத்தில் கயிறு இறுக்கியதில் அவர் இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-29 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மகன் கார்த்தி கேயன்(வயது 22). தொழிலாளியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூக்கில் தொங்கி கொண்டிருந்த கார்த்திகேயனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை பிடிக்காத கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விடாமல் இருப்பதற்காக அவரை பிடித்து வார்டில் அமர வைத்து அவரது அருகிலேயே அமர்ந்து இருந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் ஏமாற்றி விட்டு கார்த்திகேயன் வார்டில் இருந்து தப்பித்து வெளியே வந்து விட்டார். மருத்துவமனைக்கு வெளியே சென்ற அவரை உறவினர்கள் ஓடிவந்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்ல அவர் முரண்டு பிடித்தார்.

இதனால் செய்வதறியாது தவித்தவர்கள் கார்த்திகேயனை பிடித்து அருகில் உள்ள ஒரு கடையின் முன்பு இருந்த தூணில் கயிற்றின் மூலம் கட்டினர். கயிற்றால் கட்டிக்கொண்டு இருந்தபோதே அவர் முரண்டுபிடித்தபடியே கீழே அமர்ந்தார். அப்போது கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. ஏற்கனவே கழுத்து எலும்பு முறிந்த நிலையில், அதே இடத்தில் மீண்டும் கயிறு இறுக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூணில் கட்டி வைக்கப்பட்ட தொழிலாளி கயிறு இறுக்கியதில் இறந்த சம்பவம் தஞ்சையில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்