அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நீராவி குளியல் சிகிச்சை பிரிவுக்கு கட்டிட பணிகள் தாமதம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீராவி குளியல் சிகிச்சை பிரிவுக்கு கட்டிட பணிகள் தாமதமாகி வருகிறது.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, எலும்பு பிரிவு, இயற்கை மற்றும் யோகா மருத்துவப்பிரிவு, பொது மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் உள்ளது.
இயற்கை மற்றும் யோகா மருத்துவப்பிரிவில் உடல் எடையை குறைக்க தற்போது நீராவி குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இடுப்பு குளியல், மண் குளியல், முதுகு தண்டுவட குளியல், வாழை இலை குளியல், கை, கால் மூட்டு வலிக்கு மெழுகு ஒத்தரம் மற்றும் அக்கு பஞ்சர் உள்ளிட்ட அதிநவீன சிகிச்சைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக குழந்தையில்லாத பெண்களுக்கு இடுப்பு குளியல் மற்றும் வயிற்று பட்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடுப்பு குளியல் சிகிச்சை அளிப்பதால் பெண்களுக்கு உடல் சூட்டை குறைப்பதுடன், கர்ப்ப பைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி கருத்தரிக்க வழி வகுக்கிறது. இந்த இடுப்பு குளியல் சிகிச்சை மாதத்திற்கு 15 முதல் 20 பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் ஆண்களுக்கும் ஆண்மை குறைவு பிரச்சினைக்கு இந்த இடுப்பு குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த குளியல் சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இது தவிர இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவில் யோகா பயிற்சி பள்ளியும் நடக்கிறது. இங்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை யோகா மூலம் மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அதி நவீன சிகிச்சைகள் தொடங்கினாலும், அதற்கு போதுமான அளவுக்கு இந்த மருத்துவமனையில் இட வசதி இல்லை. இதனால் இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவுக்கு புதிதாக கட்டிடம் கேட்டு மருத்துவமனை நிர்வாகம், அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவுக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடுக்கம்பாறை உள்ளிட்ட பல அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை கட்டிடப்பணி தொடங்குவதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வரவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மற்றும் யோகா மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.