நாக்பூர் காங்கிரஸ் கட்சியினர் எனக்கு ஆதரவு பா.ஜனதா வேட்பாளர் நிதின் கட்காரி சொல்கிறார்

நாக்பூர் காங்கிரஸ் கட்சியினர் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர் என பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

Update: 2019-03-28 23:00 GMT
நாக்பூர், 

நாக்பூர் காங்கிரஸ் கட்சியினர் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர் என பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சூடுபிடித்த தேர்தல் களம்

சொந்த தொகுதியான நாக்பூரில் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நிதின் கட்காரி களம் காண்கிறார். அவரை பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நானா படோலே எதிர்த்து நிற்கிறார்.

ஏப்ரல் 11-ந் தேதி முதல் கட்ட தேர்தலில் இருவரும் சந்திக்க உள்ளதால் தேர்தல் களம் அங்கு சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் நிதின் கட்காரி கூறியதாவது:-

அதிக வாக்குகள் பெறுவேன்...

பெருமளவிலான காங்கிரஸ் தொண்டர்கள் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாங்கள் உடல் அளவில் மட்டுமே இங்கு இருக்கிறோம். ஆனால் எங்கள் இதயங்கள் உங்களுடன் உள்ளது. தங்களின் முழு ஆதரவு எனக்கு உண்டு என அவர்கள் தெரிவித்தனர். பா.ஜனதா கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் தாழ்மையாக மக்களை சென்று சந்தித்து மக்களுக்கு செய்த நன்மைகளை எடுத்து கூறுங்கள். அகந்தையுடன் மக்களை அணுக வேண்டாம்.

2014-ம் ஆண்டை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை நான் வெற்றிபெறுவேன். எந்த எதிர்க்கட்சி வேட்பாளர் பெயரையோ, கட்சியையோ குறைகூறக்கூடாது என நான் முடிவு செய்துள்ளேன். என்னால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் நான் எடுத்துக்கூறுவேன்.

கடந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் ஒருபோதும் மக்களுக்கு வழங்கமாட்டோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதை நிச்சயம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்