வடகிழக்கு மும்பை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கிரித் சோமையாவை நிறுத்தினால் வெற்றிபெற மாட்டார் சிவசேனா சொல்கிறது
வடகிழக்கு மும்பை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கிரித் சோமையாவை நிறுத்தினால் வெற்றிபெற மாட்டார் என சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
வடகிழக்கு மும்பை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கிரித் சோமையாவை நிறுத்தினால் வெற்றிபெற மாட்டார் என சிவசேனா கூறியுள்ளது.
சிவசேனா மீது விமர்சனம்
வடகிழக்கு மும்பை தொகுதி எம்.பி. கிரித் சோமையா தொடர்ந்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பேசி அவரை விமர்சித்து வந்தார்.
தற்போது பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் பா.ஜனதா சார்பில் கிரித் சோமையாவை மீண்டும் அந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ஆகியோரிடம் சமீபத்தில் கிரித்சோமையா எம்.பி. நேரம் கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் தம்பியான சுனில் ராவத் எம்.எல்.ஏ. கொடுத்த பேட்டியில் கூறியதாவது:-
உறுதி அளிக்கிறேன்...
வடகிழக்கு மும்பை தொகுதியில் கிரித் சோமையாவுக்கு பதில் எந்த வேட்பாளரை அறிவித்தாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம்.
கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக கிரித் சோமையா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீது பரப்பிய அவதூறு குற்றச்சாட்டுகளால் சிவசேனா மட்டுமல்ல மராத்தி பேசும் அந்த நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மக்களே அவரை எதிர்க்கின்றனர். தவறுதலாக கூட அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டால் பா.ஜனதா அந்த தொகுதியை இழக்க நேரிடும் என நான் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் அங்கு போட்டியிடுவதற்கான நேரம் வரவில்லை. ஆனால் தேவைப்படும் பட்சத்தில் நான் தயாராகவே இருக்கிறேன். இதுகுறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.
வடகிழக்கு மும்பை தொகுதில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.