லஞ்ச வழக்கில் சிக்கிய மந்திரி திலிப் காம்லேவை பதவி நீக்க வேண்டும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை

லஞ்ச வழக்கில் சிக்கிய மந்திரி திலிப் காம்லேவை பதவி நீக்க வேண்டும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை

Update: 2019-03-28 23:00 GMT
மும்பை, 

லஞ்ச வழக்கில் சிக்கிய மந்திரியை பதவி நீக்கவேண்டும் என்று காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஐகோர்ட்டு உத்தரவு

மதுக்கடைக்கு உரிமம் வழங்க தன்னிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சமூகநீதித்துறை மந்திரி திலிப் காம்லே மீது சமீபத்தில் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து அவர் அவுரங்காபாத்தின் ஐகோர்ட்டு அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மந்திரி திலிப் காம்லே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் வழக்கில் சிக்கிய மந்திரியை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

எதிர்க்கட்சி கோரிக்கை

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான தனஞ்செய் முண்டே மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவாந்த் ஆகியோர் அவரை பதவிநீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் செய்து தொடர்பாளர் நவாப் மாலிக் அவரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் மந்திரி திலிப் காம்லே தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் சதி

புகார் கொடுத்த நபரை நான் இதுவரை சந்தித்ததே கிடையாது. இது பா.ஜனதா மற்றும் எனது புகழை மழுங்கடிக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதியாகும்.

நான் அன்னபாவு சாதே நிதி வளர்ச்சி கழகத்தில் நடந்த முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினேன். எனவே தான் எதிர்க்கட்சிகள் என்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கிறது.

எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்று என்மீது வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளது. எனக்கு எதிரான சதித்திட்டம் விசாரணையின் மூலம் முறியடிக்கப்படும்.

என்மீது வழக்கு தொடுத்தவர் 2014-ம் சட்டசபை ஆண்டு தேர்தலில் கங்காப்பூர் தொகுதில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்