தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அமீத்குமார் தலைமை தாங்கி பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தங்களுடன் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுடைய தொலைபேசி எண்ணை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று தேவையான மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறையினர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குச்சாவடி மையங்களில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுபாட்டு மையம், ஊடக மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.