காளையார்கோவில், சிங்கம்புணரியில் அரசு பள்ளிகளுக்கு கிராம மக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்
காளையார்கோவில், சிங்கம்புணரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கிராம மக்கள் கல்வி சீர்வரிசைகளை வழங்கினர்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே சிறு வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம மக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னை அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம் தலைமை தாங்கினார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் அண்டோ ரெக்ஸ், சகாய செல்வன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் புளோரா, பயிற்றுனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பால் ஜோசப் அனைவரையும் வரவேற்றார். இதில் கிராமத்தினர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, சேர் மற்றும் நாற்காலிகள், மின்விசிறி உள்பட பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக வழங்கினர். விழாவில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
சிங்கம்புணரி மேலத்தெரு மற்றும் வேளார்தெரு சந்திப்பில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சந்தி வீரன் கூடத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டத்துடனும், மேளதாளங்களுடனும் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள், நன்கொடையாளர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.
அதில் தண்ணீர் கேன், டம்ளர்கள், பாய் விரிப்புக்கள், பீரோ, மின்விசிறிகள், நாற்காலிகள் உள்பட பள்ளிக்கு தேவையான உபயோக பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சூரியபிரபா தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் தரை தளம் (டைல்ஸ்) அமைத்து கொடுத்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கிய பொது மக்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.