நெல்லை-தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணிகள் தீவிரம்

நெல்லை, தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2019-03-28 22:00 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லை தொகுதி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி (தனி) என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்யப்படுகிறது. இந்த 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவாகும் ஓட்டுகள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்

அங்கு வைத்து ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியான அறை ஒதுக்கப்படுகிறது.

ஒவ்வொரு அறைகளிலும் மேஜை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது என்ஜினீயரிங் கல்லூரி அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் ஓட்டு எண்ணிக்கைக்கு சுமார் ஒரு மாதம் காலம் இந்த எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியுள்ளது. இதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி தொகுதி

தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்விபுத்தூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அந்த தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.

அந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணுவதற்கு தேவையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

மேலும் செய்திகள்