மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு இன்று கொண்டு செல்லப்படுகின்றன

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று 2-வது நாளாக சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த எந்திரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Update: 2019-03-28 22:30 GMT
நெல்லை, 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று 2-வது நாளாக சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த எந்திரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தொகுதி வாரியாக ஒதுக்கீடு

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் கீழ் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகின்றன.

தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியின் கீழ் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதுதவிர விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 2 தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டு உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்படுகிறது. 10 தொகுதிகளில் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்து 562 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 870 கட்டுப்பாட்டு கருவி மற்றும் 4 ஆயிரத்து 160 யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை சரிபார்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2-வது நாளாக...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக சரிபார்க்கும் பணி நடந்தது. என்ஜினீயர்கள் ஒவ்வொரு எந்திரங்களாக சரிபார்த்து வருகின்றனர். இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷில்பா பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தாசில்தார் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்