கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு வேனில் கொண்டு சென்ற வங்கிக்கு சொந்தமான ரூ.10 கோடி பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் நடவடிக்கை
உரிய ஆவணங்கள் இல்லாததால் கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு வேனில் கொண்டு சென்ற வங்கிக்கு சொந்தமான ரூ.10 கோடியை பல்லடம் அருகே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்லடம்,
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்பாளர்களும் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ வினியோகம் செய்து விடக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், நிலைக்குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் பல்லடத்தில் இருந்து கரடிவாவி-செலக்கெரிச்சல் செல்லும் சாலையில் துண்டுக்காடு பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியும், திருப்பூர் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளருமான கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வேனில் 6 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் ரூபாய் நோட்டு கட்டுகளில் கோவையை அடுத்த போத்தனூரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் முதுநிலை மேலாளரின் கையொப்பம் இருந்தது.
இதையடுத்து அந்த வேனில் இருந்தவரிடம் கண்காணிப்பு குழுவினர் விசாரணை செய்தபோது, அவருடைய பெயர் ஆனந்த சரவணன் என்றும், அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும், அந்த வேனில் ரூ.10 கோடி இருப்பதும், அந்த பணம் போத்தனூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் உள்ள வங்கி கிளைக்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் எந்தெந்த வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்கிற ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து வேனுடன் ரூ.10 கோடியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று தேர்தல் அதிகாரி முருகனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை அதிகம் என்பதால் தேர்தல் அதிகாரி, இது குறித்து கோவையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கோவையில் இருந்து பல்லடம் வந்து, வேனில் பணத்தை கொண்டு சென்றவரிடம் விசாரணை நடத்தினார்கள்.