சேலத்தில் தேர்தல் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் ‘என்னோடு ஒரு கிராமத்திற்கு வந்து மக்களை சந்திக்க முடியுமா?’

‘என்னோடு ஒரு கிராமத்திற்கு வந்து மக்களை சந்திக்க முடியுமா?’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்து பேசினார்.

Update: 2019-03-28 22:45 GMT
சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டம் மல்லூர், இளம்பிள்ளை, கொங்கணாபுரம், எடப்பாடி, கே.ஆர்.தோப்பூர், மெய்யனூர் பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் மோடி ஆட்சியையும், தமிழகத்தில் நடக்கிற எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் அகற்றிட வேண்டும் என்ற காரணத்திற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மிக எழுச்சியோடும், உற்சாகமாகவும் வரவேற்பு அளித்து வருவதை காணமுடிகிறது. இதனால்

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அலை வீசுகிறது. இது மோடி எதிர்ப்பு அலை.

இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு ‘கெட்அவுட்’ சொல்ல வேண்டும். கடந்த தேர்தலின்போது கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். அவர் கூறியபடி செய்தாரா? அதற்கு மாறாக, அனைவருக்கும் அவர் பெரிய பட்டை நாமம் போட்டுவிட்டார். எனவே மோடி ஆட்சி அல்ல, அது மோசடி ஆட்சி.

ஒரேநாள் இரவில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்று தெரியுமா?. பண மதிப்பிழப்பு காரணமாக பொதுமக்களை நடுரோட்டுக்கு கொண்டு வந்தவர் மோடி. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று கூறினார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையா?.

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார் மோடி. ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பிரதமரின் சாதனை. குறிப்பாக சொல்லபோனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. மோடியின் பாசிச ஆட்சியை துரத்தும் நாள் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி ஆகும்.

நீட் தேர்வினால் அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது டாக்டர் கனவு பறிபோய்விட்டது. இதனால் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன் ரத்து, ரெயிலில் மாணவர்களுக்கு பாஸ், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருப்பது மாதிரி சேலத்திலும் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் ‘சொல்வதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம்’ என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறுவார். அவரது வழியில் தற்போது தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது தி.மு.க. தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலில் ஹீரோ (கதாநாயகன்) என்று கூறுகிறார்கள். ஒரு ஹீரோ இருந்தால் வில்லன் இருப்பார். அந்த வில்லன் யார்? என்று உங்களுக்கு தெரியும். அவர் தான் மோடி.

அதேபோல் வில்லனுக்கு துணையாக 2 கைக்கூலிகள் இருப்பார்கள். அது யார்? என்று தெரியுமா? அவர்கள் தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதாவது, ஒரு கதாநாயகன், ஒரு வில்லன், 2 கைக்கூலிகள் இருந்தால் காமெடியன்களும் இருப்பார்கள். அவர்கள் யார்? என்றால் ஒருவர் ராமதாஸ். மற்றொருவர் அன்புமணி ராமதாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் அன்புமணி ராமதாஸ், எப்படியெல்லாம் விமர்சனம் செய்தார்? என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை மறந்துவிட்டு தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்லவர். ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியவில்லை. அவரை வைத்து ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டணி வைத்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக துணை சபாநாயகரின் மகன் பிரவீன் சென்ற காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி ஒருவர் இறந்துபோனார். ஆனால் அதை விபத்து என்று போலீசார் முடித்துவிட்டனர். இப்போது நடந்துள்ள பொள்ளாச்சி சம்பவத்தை யாரும் மறக்கவில்லை. பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார். அவரை சிலர் மிரட்டுகிறார்கள். இதை யாரும் மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நமது தலைவரை பார்த்து பேசும்போது, கருணாநிதி மகன் என்பதை தவிர உங்களுக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்கிறார். தி.மு.க.வில் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து, சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்-அமைச்சர், தி.மு.க.செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதியின் பேரனாகவும், மு.க.ஸ்டாலின் மகனாகவும் தி.மு.க.வின் தொண்டனாக இருந்து நான் முதல்-அமைச்சருக்கு சவால் விடுகிறேன். என்னோடு ஒரு கிராமத்திற்கு நீங்கள் வந்து மக்களை சந்திக்க முடியுமா? தமிழகத்தில் எந்த கிராமத்தையும் தேர்ந்தெடுங்கள். யாரை நோக்கி மக்கள் வந்து குறைகள் தெரிவிப்பார்கள் என்று பார்ப்போமா?.

மத்தியில் நடக்கிற பாசிச ஆட்சியையும், மாநிலத்தில் நடக்கிற எடப்பாடி ஆட்சியையும் அகற்றிட அனைவரும் தி.மு.க.வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஜலகண்டாபுரம், தாரமங்கலம், ஓமலூர், கருப்பூர், கன்னங்குறிச்சி, பால் மார்க்கெட், தாதகாப்பட்டி, அம்மாப் பேட்டை ஆகிய பகுதிகளிலும் திறந்த வேனில் உதயநிதி ஸ்டாலின் நின்றவாறு தி.மு.க.வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். முன்னதாக நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்