சேலத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது
சேலத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அரசு பஸ் ஒன்று சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. இந்த பஸ்சில் டிரைவராக மணக்காட்டை சேர்ந்த கருணாநிதி (வயது 54) என்பவர் இருந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு டெப்போவுக்கு செல்ல பஸ்சை வெளியே கொண்டு வந்தார். அப்போது பஸ்சுக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசியபடியே வாலிபர் ஒருவர் வந்தார்.
இதைப்பார்த்த டிரைவர் அந்த வாலிபரை ஓரமாக செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி, தகராறு செய்ததுடன் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் 2 பேர் வந்தனர். அவர்களும் டிரைவர், கண்டக்டரை தாக்கினர். நடுரோட்டில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து வாலிபர்களை பிடித்தனர். இதனிடையே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளப்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதில் செல்போனில் பேசியபடி வந்து, தகராறில் ஈடுபட்டது கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் (22), என்பது தெரியவந்தது. இவரும், தாதகாப்பட்டியை சேர்ந்த ஜீவா (27), பள்ளப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (42) ஆகியோர் டிரைவர், கண்டக்டரை தாக்கி உள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை யும் கைது செய்தனர்.
இவர்கள் தாக்கியதில் காயமடைந்த கருணாநிதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.