ஏற்காடு மலைப்பாதையில் விபத்து: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
ஏற்காடு,
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மகன் மாணிக்கம் (வயது 55). இவர் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக மாணிக்கம் இங்கு பணியாற்றி வந்தார்.
நேற்று காலை 9 மணியளவில் பணிக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் மாணிக்கம் சென்று கொண்டிருந்தார். ஏற்காடு மலைப்பாதையில் 20-வது கொண்டைஊசி வளைவில் சென்றபோது ஏற்காட்டில் இருந்து அரசு பஸ் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை மேச்சேரியை சேர்ந்த பாலமுருகன் (40) என்பவர் ஓட்டி வந்தார்.
எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், மாணிக்கத்தின் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறி விழுந்த மாணிக்கம் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.