சின்னசேலம் அருகே, வேனில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
சின்னசேலம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பறக்கும்படை அலுவலர் சுமதி தலைமையிலான குழுவினர் நேற்று காலை சின்னசேலம் அடுத்த கனியாமூர் கூட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக வந்த ஒரு வேனை பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 30 ஆயிரம் புகையிலை (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் 20 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
தொடர்ந்து வேனை ஓட்டிவந்த டிரைவரிடம் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி சமயபுரம் சக்திநகரை சேர்ந்த பிச்சை மகன் பரிமனம்(வயது 44) என்பதும், ஆத்தூரில் இருந்து சின்னசேலம் வழியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு வியாபாரிக்காக புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்தபோது பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட வேனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்ததோடு, டிரைவர் பரிமனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, பரிமனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.