பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பார் நாகராஜ் ஆஜர் - கைதான 4 பேருடன் உள்ள தொடர்புகள் குறித்து 4 மணிநேரம் விசாரணை
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பார் நாகராஜ் ஆஜராகி போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு பதில் அளித்தார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் உள்ள தொடர்புகள் குறித்து அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய கூட்டாளிகளான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இதில் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் திருநாவுக்கரசு பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவருமான பார் உரிமையாளர் நாகராஜ் (28), தி.மு.க. கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவர் அணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பார் நாகராஜ் நேற்று மாலை ஆஜர் ஆனார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது.
மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை 4 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டனர். அதற்கு முழு பதிலையும் நான் அளித்துள்ளேன். புகார் தெரிவித்த மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்று நான் சொல்ல முடியாது. திருநாவுக்கரசு வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க எதிர்கட்சியினர் அரசியல் ஆக்கிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
சம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தி.மு.க. பிரமுகர் தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று ஆஜர் ஆகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க. சட்டத்துறை மாநில இணைச்செயலாளர் கே.எம்.தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் முத்துகிருஷ்ணன், இப்ராகீம் உள்பட தி.மு.க. வக்கீல்கள் ஆஜர் ஆனார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியதின் காரணம் என்ன? என்பது குறித்து விவரம் தெரிவிக்குமாறு எழுத்து மூலமாக தி.மு.க. வக்கீல்கள் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து தி.மு.க. வக்கீல் கே.எம்.தண்டபாணி கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக அதிகாலை 3 மணிக்கு தென்றல் மணிமாறனின் வீட்டுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு வினியோகித்து உள்ளனர். இதன் மூலம் அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக முடியும் என்று தெரிவித்தார்.