நாங்குநேரியில் அரசு செய்ய முடியாத பணிகளை செய்தேன், ‘மண்ணின் மைந்தனான எனக்கு கை சின்னத்தில் வாக்கு தாருங்கள்’ -சுசீந்திரத்தில் பிரசாரத்தை தொடங்கிய வசந்தகுமார் பேச்சு

நாங்குநேரியில் அரசு செய்ய முடியாத பணிகளை செய்துள்ளேன். ஆகவே குமரி மண்ணின் மைந்தனான எனக்கு கை சின்னத்தில் வாக்கு தாருங்கள் என்று சுசீந்திரத்தில் பிரசாரத்தை தொடங்கிய வசந்தகுமார் பேசினார்.

Update: 2019-03-27 22:59 GMT
சுசீந்திரம், 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை சுசீந்திரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.பிரசாரத்தை தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வேட்பாளர் எச்.வசந்தகுமார், அங்கு கூடியிருந்த மக்களிடையே கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உண்மைக்காக போராடுகிற வசந்தகுமாருக்கும், பொய்யைச் சொல்லி ஆட்சியை பிடித்தவர்களுக்கும் இடையே நடக்கின்ற போராட்டம் தான் இந்த தேர்தல். மக்களுக்காகத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்துக்காக மக்கள் அல்ல. மக்கள் எல்லாம் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் ஆட்சியாளர்கள் அதைச் செய்யவில்லை. எனவே நாங்கள் எதைச் செய்ய முடியுமோ? அதைத்தான் சொல்வோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவோம். விவசாயிகளை காப்பாற்றுவோம். இங்குள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம். மீன்பிடிக்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கையில் வளம் சேர்ப்போம்.

படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற வேண்டும் என்பதை மனதில் வைத்து நான் போட்டியிடுகிறேன். எனக்கு உங்கள் ஆதரவு தேவை. சேவையை எனக்காக பயன்படுத்துவது இல்லை. இங்கு நிற்கிற அத்தனை மக்களுக்காகத்தான் சேவை செய்வேன். அந்த சேவையை தொடர்ந்து செய்வதற்கு நீங்கள் எப்போதும் என்னை வாழ்த்தி வெற்றியாளனாக மாற்ற வேண்டும்.

நான் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்து, அகஸ்தீஸ்வரம் மற்றும் நாகர்கோவில் பள்ளி, கல்லூரிகளில் படித்து சிறிய ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து, இறைவன் அருளால் வளர்ந்திருக்கிறேன் என்றால் எல்லாமே இந்த மண்ணுக்குச் சொந்தம். இந்த மண்ணின் மக்களைத்தான் நான் என்றென்றும் நினைத்து கொண்டிருப்பேன். உங்களோடு என்றும் இருப்பேன். உங்களுக்காகத்தான் பணியாற்றுவேன். எனவே கை சின்னத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வசந்தகுமார் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

போர்க்களத்தில் நிற்கும் போது எதிரியை பாராட்ட மாட்டார்கள். எவ்வளவு குறை சொல்ல முடியுமோ அவ்வளவு குறை சொல்வார்கள். அதைப்போல்தான் என்னை எதிர்க்கட்சியினர் குறை சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் நாங்குனேரி தொகுதியில் சரித்திரம் படைத்துள்ளேன். அரசாங்கம் செய்ய முடியாத காரியங்கள், குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை சரிசெய்வது, ஏறத்தாழ 869 கோடி ரூபாயில் தாமிரபரணி, கருமேனி ஆறு, பச்சை ஆறு இணைப்பு, நாங்குனேரி ஹைடெக் இன்டஸ்ட்ரியல் பார்க் ஆகியவற்றை இந்தியாவிலேயே முதன் முதலாக செய்தவன் இந்த வசந்தகுமார்.

ஆகவே நாடாளுமன்றத்துக்கு சென்றால் இன்னும் அதிகம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். அது இந்த மண்ணில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கும். எனக்கு இறைவன் வாய்ப்பு தரத்தான் கை சின்னத்தில் போட்டியிடுகிறேன். அத்தனை பேரும் எனக்கு வாய்ப்பினை தரவேண்டும். அதாவது சரக்கு பெட்டக துறைமுகம் என்பது அதானி போன்றவர்கள் தொடங்கி, பணம் சம்பாதிப்பதற்காக அதைக் கொண்டு வருகிறார்கள். எங்களை பொறுத்தவரையில் நமது குமரி மாவட்டத்தில் விளைகின்ற பொருட்களை கொண்டு செல்வதற்கும், இந்த மாவட்டத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் தான் தேவை என்று நாங்கள் கேட்கிறோம்.

பொன்.ராதாகிருஷ்ணன் இந்த மாவட்டத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்கிறார். நான்கு வழிச்சாலை காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது. அதையும் நான் தான் சாதித்தேன் என்று சொல்கிறார். அதைபோல் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு கணக்கு கொடுக்கட்டும். அதை ஏற்று சாதனையாளர் என்று சொல்வோம். அடிக்கல்லை நாட்டிவிட்டு ரூ.40 ஆயிரம் கோடி என்று சொல்வது நியாயமல்ல. அவர் எந்த சாதனையும் செய்யவில்லை. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லித்தான் போராட்டம் நடத்தினார், தேர்தலில் நின்றார். 2 கோடி பேருக்கு வேலை தருவோம், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவரவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், சாய் சப்-சென்டர் அமைப்போம் என்றார்கள். எதுவுமே செய்யவில்லை. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் நிலைக்க முடியாது என்பதை 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவு காட்டும்.

இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.

பின்னர் அவர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் சுசீந்திரம் ரதவீதிகளில் நடந்து சென்று அப்பகுதி வாக்காளர்களிடம் வீடு, வீடாகச் சென்று கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். மேலும் சாலையோரம் அமைத்திருந்த சந்தை வியாபாரிகள், கடைக்காரர்கள், பஸ் பயணிகள் என அனைத்து தரப்பினரிடமும் வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், மாநில நிர்வாகி தில்லைச்செல்வம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திருமாவேந்தன், பகலவன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்