1½ வயது சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய ‘ஹேர்பின்’ அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

1½ வயது சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய 4 செ.மீ. நீள ‘ஹேர்பின்’ அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Update: 2019-03-27 22:45 GMT
மும்பை,

1½ வயது சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய 4 செ.மீ. நீள ‘ஹேர்பின்’ அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

உணவு குழாயில் சிக்கிய ‘ஹேர்பின்’

தானே மாவட்டம் சகாப்பூரை சேர்ந்த ரோகித் என்ற 1½ வயது சிறுவன் கடந்த 14-ந் தேதி ரத்தம், ரத்தமாக வாந்தி எடுத்தான். மேலும் விடாமல் அழுது கொண்டே இருந்தான்.

இதனால் பதறிப்போன அவனது பெற்றோர், உடனே சிறுவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் சிறுவனை மும்பை பரேலில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவன் சிகிச்சைக்காக அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு டாக்டர்கள் அவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தனர். இதில் சிறுவனின் உணவு குழாயில் 4 செ.மீ. நீளம் கொண்ட ‘ஹேர்பின்’ சிக்கியிருப்பது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

அவன் விளையாடி கொண்டிருந்த போது, அந்த ஹேர்பின்னை விழுங்கி இருக்கிறான். அந்த ஹேர்பின் தொண்டை பகுதிக்கு கீழே உணவு குழாயை சேதப்படுத்தியதால் அவன் ரத்த வாந்தி எடுத்து வேதனையால் துடித்தது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் அவனது உணவு குழாயில் சிக்கியிருந்த ஹேர்பின்னை வெற்றிகரமாக அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்